188. அருள்மிகு மறைக்காட்டீஸ்வரர் கோயில்
இறைவன் மறைக்காட்டீஸ்வரர், வேதாரண்யேஸ்வரர்
இறைவி யாழைப்பழித்த மொழியம்மை
தீர்த்தம் வேத தீர்த்தம்
தல விருட்சம் வன்னி மரம்
பதிகம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
தல இருப்பிடம் திருமறைக்காடு, தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'வேதாரண்யம்' என்று அழைக்கப்படுகிறது. நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 50 கி.மீ. தொலைவிலும், திருத்துறைப்பூண்டியிலிருந்து சுமார் 35 கி.மீ. தொலைவிலும் இத்தலம் உள்ளது. முக்கிய ஊர்களில் இருந்து இரயில் மற்றும் பேருந்து வசதிகள் உள்ளன.
தலச்சிறப்பு

Vedaranyam Gopuramவேதங்கள் வந்து சிவபெருமானை வழிபட்ட தலமாதலால் 'திருமறைக்காடு' என்று அழைக்கப்படுகிறது.

மூலவர் 'மறைக்காட்டீஸ்வரர்' என்றும் 'வேதாரண்யேஸ்வரர்' என்றும் அழகான லிங்க வடிவில் காட்சி தருகின்றார். மூலருக்கு பின்புறம் அகத்திய முனிவருக்கு அருளியபடி உமா மகேஸ்வரராக திருமணக் கோலத்தில் காட்சி அளிக்கின்றார். அம்பிகை 'யாழைப்பழித்த நாயகி' என்னும் திருநாமத்துடன் அபய, வரத ஹஸ்தங்களுடன் நான்கு கரங்கள் கொண்டு அம்பாள் அழகாக தரிசனம் தருகின்றாள்.

மூலவர் கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். இக்கோயிலில் துர்க்கை தெற்கு நோக்கி காட்சி தருகின்றார். மேலும் நவக்கிரகங்கள் அனைத்தும் இறைவனது திருமணக் கோலத்தைக் காண ஒரே திசையில் காட்சி தருகின்றனர்.

Vedaranyam Moolavarஇக்கோயில் சப்தவிடங்க தலங்களுள் புவனி விடங்கத் தலம். இங்குள்ள தியாகராஜர் சன்னதி விசேஷம். இவரது நடனம் 'அம்ச நடனம்' என்று வழங்கப்படுகிறது. முசுகுந்த சக்கரவர்த்தியால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. திருவாரூர், திருக்கோளிலி, திருக்காறாயில், திருவாய்மூர், திருநள்ளாறு, திருநாகைக்காரோணம் ஆகியவை மற்ற சப்தவிடங்கத் தலங்களாகும். மரகத லிங்கம் உள்ளது. தியாகேசருக்கு எதிரில் சுந்தரமூர்த்தி நாயனாரும், பரவை நாச்சியாருக்கும் சன்னதி உள்ளது.

இராவணனை அழித்த பிறகு இராமபிரான் இத்தலத்திற்கு வந்து கடலில் நீராடி இறைவனை வழிபட்டார். அதனால் இக்கடல் தீர்த்தம் 'ஆதிசேது' என்றும் வழங்கப்படுகிறது. ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய நாட்களில் கோடியக்கரை கடலிலும், இங்குள்ள கடலிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவார்கள். இக்கோயிலில் மேற்குப் பகுதியில் உள்ள வீரஹத்தி விநாயகரை இராமபிரான் பூசித்தார்.

Vedaranyam Sambandar Apparவேதங்கள் வழிபட்ட பிறகு கதவை மூடிவிட்டு சென்று விட்டதால் மக்கள் பக்கத்தில் உள்ள வாசல் வழியாகவே சென்று வழிபட்டு வந்தனர். அப்பரும், சம்பந்தரும் இத்தலத்திற்கு எழுந்தருளியபோது மக்கள் இதைத் தெரிவிக்க, அவர்கள் இருவரும் பதிகம் பாடி வேதங்களால் மூடப்பட்ட கதவினை திறக்கவும், மூடவும் செய்தனர். அதுமுதல் மக்கள் மீண்டும் கோபுர வாசல் வழியாகவேச் சென்று வழிபடுகின்றனர். சுந்தரமூர்த்தி நாயனார் இக்கோயிலுக்கு சேரமான் பெருமாள் நாயனாருடன் வந்து வழிபட்டதாக பெரிய புராணம் கூறுகிறது.

கோயில் கருவறையில் உள்ள விளக்கின் எண்ணெயைக் குடிக்க வந்த எலியின் மூக்குப்பட, திரியின் தீபம் பிரகாசமாக எரிந்தது. அன்று சிவராத்திரி ஆகையால் அந்த எலி, இறைவன் அருளால் அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக பிறப்பெடுத்தது. 'தூண்டு சுடரணைய சோதி கண்டாய்' என்று திருநாவுக்கரசர் பாடியதற்கேற்ப இத்தலம் 'வேதாரண்யம் விளக்கழகு' என்று பெயர் பெற்றது.

இக்கோயிலின் தலவிருட்சம் வன்னி மரம். இதில் ஒருபுறம் காய்கள் நீளமாகவும், முட்கள் நிறைந்ததாகவும், மறுபுறம் உருண்டையாகவும், முட்கள் இல்லாததாகவும் உள்ளது. தாயுமானவரும், பரஞ்சோதி முனிவரும் அவதரித்த தலம்.

பிரம்மா, விஸ்வாமித்திரர், அகோர முனிவர், பஞ்ச பாண்டவர்கள், மகாபலி சக்கரவர்த்தி ஆகியோர் வழிபட்ட தலம்.

இக்கோயில் இலங்கை யாழ்ப்பாணம் வரணி ஆதீனகர்த்தர்களை பரம்பரை அறங்காவலர்களாகக் கொண்டு இந்து சமய அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படுகிறது. வரணி ஆதீனம் 18 சைவ ஆதீனங்களுள் ஒன்று. திருவாவடுவதுறை ஆதீனத்தின் குரு முதல்வரான நமச்சிவாய மூர்த்திகள் தமது குருவான சித்தர் சிவப்பிரகாசரிடம் ஞான தீட்சை பெற்ற தலம் இது.

அருணகிரிநாதர் இத்தலத்து முருகப் பெருமானை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

ஏழு திருமுறைகளிலும் இடம் பெற்றுள்ள சிறப்புடையது. திருஞானசம்பந்தர் 5 பதிகங்களும், திருநாவுக்கரசர் 5 பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

இக்கோயில் காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com